Tuesday, March 15, 2005

பன்னாட்டு திருக்குறள் மாநாடு 2005



International Thirukkural Conference
July 9-10 2005
Washington D.C, USA

வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை(FeTNA), வாசிங்டன் டிசி தமிழ்ச் சங்கம், மற்றும் பிற தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த திருக்குறள் மாநாட்டை கொலம்பியா, மேரிலாந்தில் நடத்தவிருக்கின்றன. முனைவர் வா.சே. குழந்தைசாமி - பல பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணை வேந்தர், வாழும் வள்ளுவம் என்ற புத்தகத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறார். அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கிய ராஜியம், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்தச் செய்தியை உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மாநாட்டைப் பற்றி மேலும் விவரங்களைத் அறிந்து கொள்ள, இந்த இணைய தளத்தைப் பாருங்கள்: http://www.thirukkural2005.org . உங்களது கருத்துக்களை பின்னூட்டஙகள் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி,
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு

பன்னாட்டு திருக்குறள் மாநாட்டின் குறிக்கோள் என்ன?

மனித வரலாற்றில் எத்தனையோ சமூக மற்றும் மதத் தலைவர்கள், முனிவர்கள், தத்துவ ஞானிகள் இருந்திருக்கிறார்கள். இவர்களை சிந்திக்க வைத்த பல அம்சங்களில் கடவுள் நம்பிக்கை, ஒழுக்கம், வாய்மை, மனிதனின் சிக்கலான உணர்வுகள், வாழ்க்கையின் பொருள், மத நல்லிணக்கம் போன்றவை முக்கியமானவை. வாழ்க்கையின் பல அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து நடுநாயகமான, நிலையான உண்மைகளை நிலைநாட்டும் ஒரு படைப்பையோ, படைப்பாளியையோ பார்ப்பது மிகவும் அபூர்வம்.

திருவள்ளுவரின் படைப்பான 'திருக்குறள்', இப்படிப்பட்ட பல அம்சங்களைக் கொண்டது. திருக்குறள் வெரும் தத்துவங்களை மட்டுமின்றி, கலையுணர்வும் கொண்டு படைக்கப்பட்டது. தமிழ் மொழியின் கவித்துவத்தை திருவள்ளுவர் திருக்குறளில் சிறப்பாக நிறுவியிருக்கிறார். இந்த மா மேதையை தமிழ் ஆக்கிரமித்து, ஊக்குவித்திருப்பதை நம்மால் திருக்குறளைப் படிக்கும் போது உணர முடிகிறது. திருக்குறள் ஒரு மனிதனின் சமூக-பொருளாதார நிலைக்கு அப்பாற்பட்டு அவனைச் சென்றடையும் தன்மை வாய்ந்தது.

உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிகளான புத்தர், அரிஸ்டாட்டில், கன்ப்யூஷியஸ், ப்ளாட்டோ, மாக்கியவெல்லி போன்றவர்களுக்கு இணையாக தத்துவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் திருவள்ளுவர் திருக்குறளில் பதித்திருக்கிறார். ஆனால் அவரது சொந்த மண்ணுக்கு வெளியே அவரது புகழ் இன்னும் பரவவில்லை. திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுக்க ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் தலையாய குறிக்கோள்.மேலும், அமெரிக்கர்களுக்கும், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்களுக்கும் திருக்குறளைப் பற்றி அறிய வைக்கும் ஒரு முயற்சி இது. திருக்குறள், மனித வாழ்க்கைக்கு எப்படி ஒரு வழி காட்டியாக விளங்கும் என்பது இந்த மாநாட்டில் ஆராயப்படும்.

பன்னாட்டு திருக்குறள் மாநாடு உருவான கதை

வாசிங்டன் டிசி வட்டாரத்தில் வசிக்கும் தமிழ் உணர்வாளர்களில் முனைவர்.பிரபாகரன் அவர்கள் திருக்குறள் மீது மிகுந்த பற்றுடையவர். திருக்குறளை ஆழ்ந்து படித்து அறிந்தவர். 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முனைவர்.பிரபாகரன் ஒரு இலக்கிய ஆய்வுக் கூட்டத்தை தொடங்கினார். இந்தக் கூட்டம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கூடுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் திருக்குறளின் ஒரு அதிகாரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த அதிகாரத்தில் உள்ள 10 குறள்களும் அலசப்படுகின்றன. பரிமேலழகர், மு.வரதராஜன், கலைஞர் கருணாநிதி, Dr. S.M. Diaz, Rev. Drew & John Lazarus போன்ற ஆய்வாலர்களின் திருக்குறள் பற்றிய உரைகள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. இப்படி முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் தொடங்கி தற்போது வெகுளாமை வரை இந்த இலக்கிய ஆய்வுக் கூட்டம் வெற்றிகரமாக முன்னேறியிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு கிடைத்த வரவேற்பையும், பங்கேற்பையும் பார்த்த பிரபாகரன், வாசிங்டன் டிசியில் ஒரு திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என்ற விருப்பத்தை சென்ற வருடம் தெரிவித்தார். அதற்குக் கிடைத்த பெரும் ஆதரவைக் கொண்டு, அன்றிலிருந்து மாநாட்டு ஏற்பாட்டு வேலைகள் தொடங்கப்பட்டு, இன்று வரை தடங்கலின்றி சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 4 மாதங்களே இருக்கும் இந்த நிலையில், எங்களது உழைப்பாலும் உங்களது ஆதரவாலும் இந்த மாநாடு பெரும் வெற்றியடையும் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்.

நன்றி,
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு