Tuesday, March 15, 2005

பன்னாட்டு திருக்குறள் மாநாட்டின் குறிக்கோள் என்ன?

மனித வரலாற்றில் எத்தனையோ சமூக மற்றும் மதத் தலைவர்கள், முனிவர்கள், தத்துவ ஞானிகள் இருந்திருக்கிறார்கள். இவர்களை சிந்திக்க வைத்த பல அம்சங்களில் கடவுள் நம்பிக்கை, ஒழுக்கம், வாய்மை, மனிதனின் சிக்கலான உணர்வுகள், வாழ்க்கையின் பொருள், மத நல்லிணக்கம் போன்றவை முக்கியமானவை. வாழ்க்கையின் பல அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து நடுநாயகமான, நிலையான உண்மைகளை நிலைநாட்டும் ஒரு படைப்பையோ, படைப்பாளியையோ பார்ப்பது மிகவும் அபூர்வம்.

திருவள்ளுவரின் படைப்பான 'திருக்குறள்', இப்படிப்பட்ட பல அம்சங்களைக் கொண்டது. திருக்குறள் வெரும் தத்துவங்களை மட்டுமின்றி, கலையுணர்வும் கொண்டு படைக்கப்பட்டது. தமிழ் மொழியின் கவித்துவத்தை திருவள்ளுவர் திருக்குறளில் சிறப்பாக நிறுவியிருக்கிறார். இந்த மா மேதையை தமிழ் ஆக்கிரமித்து, ஊக்குவித்திருப்பதை நம்மால் திருக்குறளைப் படிக்கும் போது உணர முடிகிறது. திருக்குறள் ஒரு மனிதனின் சமூக-பொருளாதார நிலைக்கு அப்பாற்பட்டு அவனைச் சென்றடையும் தன்மை வாய்ந்தது.

உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிகளான புத்தர், அரிஸ்டாட்டில், கன்ப்யூஷியஸ், ப்ளாட்டோ, மாக்கியவெல்லி போன்றவர்களுக்கு இணையாக தத்துவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் திருவள்ளுவர் திருக்குறளில் பதித்திருக்கிறார். ஆனால் அவரது சொந்த மண்ணுக்கு வெளியே அவரது புகழ் இன்னும் பரவவில்லை. திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுக்க ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் தலையாய குறிக்கோள்.மேலும், அமெரிக்கர்களுக்கும், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்களுக்கும் திருக்குறளைப் பற்றி அறிய வைக்கும் ஒரு முயற்சி இது. திருக்குறள், மனித வாழ்க்கைக்கு எப்படி ஒரு வழி காட்டியாக விளங்கும் என்பது இந்த மாநாட்டில் ஆராயப்படும்.

1 Comments:

At 7:33 PM, Blogger Mannai Madevan said...

1. //ஆனால் அவரது சொந்த மண்ணுக்கு வெளியே அவரது புகழ் இன்னும் பரவவில்லை. திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுக்க ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் தலையாய குறிக்கோள்.//


2. //இந்தக் கூட்டம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கூடுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் திருக்குறளின் ஒரு அதிகாரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த அதிகாரத்தில் உள்ள 10 குறள்களும் அலசப்படுகின்றன//
***************

1. தொழிற் சங்கம் அமைக்க எண்ணிய திரு. வி. க. முதலில் காலணா மாத உறுப்பினர் தொகையில், இரவு பள்ளியாக “திருக்குறள் வகுப்பு” தொடங்கினார் என்பது வரலாறு. ஆனால் இன்றென்ன நிலை?

சொந்த மண்ணுக்கு வெளியே அவர் புகழ் பரப்ப நீங்கள் முயலும் இவ்வேளை, சொந்த மண்ணில் அதன் புகழ் அறியாரையும், அழிப்பாரையும் என்னென்ப?

2. ஆயிரம் வார்த்தைகள் உரைப்பதிலும் ஓர் துறும்பை அருகில் நகர்த்தல் சிறப்பு.. அவ்வகையில் நும் பணி சிறப்பு பணியே.

ஆன்றோர்க்கு ஒரு அன்பு வேண்டுகோள். உங்கள் ஆய்வின் முடிபுகளை எழுத்து வடிவில் தருவதையும் உம் கருத்தில் கொள்க.


ஆகா! எம் பொதுமை கருவூலத்தை உலகெங்கிலும் நாட்ட புறப்பட்டோர் வாழிய! வாழியவே!!

அன்புடன்
மன்னை மாதேவன்

 

Post a Comment

<< Home