Friday, May 13, 2005

திருக்குறள் நாட்டிய நாடகம்



இந்த உலகில் ஆயிரக்கணக்கான பேர் திருக்குறளை ஆழ்ந்து படித்திருக்கிறார்கள், பேசியிருக்கிறார்கள், பாடல்களாகப் பாடியிருக்கிறார்கள். ஆனால் திருக்குறளை நாட்டிய நாடகமாக ஆடியவர்கள் மிகவும் குறைவு. இன்றைய சிக்கல்கள் நிறைந்த உலகத்தில் திருக்குறள் கூறும் நன்னெறி உணர்வுகளைத் தேடும் ஒரு நாட்டிய நாடகத்தை திருக்குறள் மாநாட்டில் நமக்கு அளிக்கவிருக்கிறார்கள் பத்மராஜா சகோதரிகள். 37 திருக்குறள்களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட இந்த நாட்டிய நாடகம் புத்துணர்ச்சி அளிக்கும் விருந்தாக அமையும். புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர்களான தனஞ்ஜெயன் தம்பதிகளின் திறமையான கலை நயத்தின் அடிப்படையில் அமைந்த இந்த நடன அமைப்பு, திருவள்ளுவரின் அர்த்தமுள்ள இரண்டு வரித் தமிழ் கவிதைகளை உயிரூட்டப்பட்ட ஒரு நடனமாக நம் கண் முன் நிறுத்துகிறது. பத்து தலை இராவணன் போன்ற புராண கதாபாத்திரங்களோடு அன்னை தெரேஸா உள்ளிட்ட நிகழ் கால நாயகர்களையும் இந்த நடனத்தில் பிரதிபலிக்கிறார்கள்.



12 வருடங்களாக பரதநாட்டியம் பயின்று வரும் கவிதா, மீரா, அஞ்சனா என்கிற பத்மராஜா சகோதரிகள், விர்ஜீனியாவில் உள்ள யோகவில் (Yogaville) கிராமத்தில் தனஞ்ஜெயன் தம்பதிகளால் வருடா வருடம் நடத்தப்படும் நாட்டிய முகாம்களில் சிறப்புப் பயிற்சி எடுத்துவந்தார்கள். கலிபோர்னியா பகுதியிலும் கிழக்குக் கரை மாகாணங்களிலும் பல நடன நிகழ்ச்சிகளை இந்தச் சகோதரிகள் நடத்தியிருக்கிறார்கள். இந்த 37 திருக்குறள்களையும் நாட்டியமாக்க பத்மராஜா சகோதரிகளுக்கு பயிற்சி அளித்த தனஞ்ஜெயன் தம்பதிகள் கூறுவது:
"திருவள்ளுவரின் அழியாத ஞான வரிகளை கவிதா, மீரா, அஞ்சனா சகோதரிகளின் நாட்டியத்தின் மூலம் உங்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மனித வாழ்க்கையின் மேம்பாடு பற்றிய தத்துவத்தை நாட்டிய மொழியில் சொல்வது மிகக் கடினமான செயல். இதை நாங்கள் அறிவை வளர்க்கும் விதமாகவும், களிப்பூட்டும் விதமாகவும் பல புராண மற்றும் நவீன சம்பவங்களை உள்ளடக்கியும் வடிவமைத்திருக்கிறோம். பத்மராஜா சகோதரிகள் திருவள்ளுவரின் ஒழுக்க கோட்பாடுகளை வரும் தலைமுறைகளிடையே பரப்புவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சி பாராட்டப்படவேண்டிய ஒன்று."

அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய அம்சங்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சி தற்காலத்துப் பார்வையாளர்களுக்கு தமிழ் மொழியின் ஆழத்தையும், அழகையும் பற்றிய வியப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

0 Comments:

Post a Comment

<< Home